
நட்புக்கு,
இன்று நான் உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை சொல்லப் போகிறேன். அதனால் தான் நீண்ட நாட்களுக்கு பின்னர் பதிவிடவும் முன்வந்துள்ளேன். பலராலும் கை விடப்பட்டது என்று கருதப்பட்ட ஜேம்ஸ் பாண்ட் படங்கள் ஆரம்பிக்கப் போவதற்கான சூழல் உருவாகி வருகிறது. என்ன நடந்தது என்பதின் விவரங்கள்:
டிசம்பர் இரண்டாம் தேதி நியூயார்க்கில் இருக்கும் நீதிமன்றமானது MGM நிறுவனத்தின் உள் கட்டமைப்பை மாற்றி அமைப்பதற்கான திட்டத்தை ஒப்புக்கொண்டது. இந்த உள் கட்டமைப்பு மாற்றத்தின் மூலம் கேரி பார்பர் மற்றும் ரோஜர் பர்னபாம் ஆகிய இருவரும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களாகி விடுகின்றனர். இப்படி செய்வதின் மூலமாக MGM நிறுவனத்தின் பங்குகளை ஐந்து பில்லியன் டாலர்களுக்கு பண்டமாற்று செய்து சேப்டர் 11 என்று பலராலும் அழைக்கப்படும் பேங்க்ரப்சி (அதாவது நம்ம ஊரில மஞ்ச நோட்டிஸ்) நிலையில் இருந்து விடுபட முடியும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த கோர்ட் ஆர்டரானது டிசம்பர் பதினைந்து முதல் அமலுக்கு வந்து மாற்றங்கள் வர ஒரு மாதம் ஆகிவிடும். ஆகையால் பிறக்கப்போகும் புத்தாண்டானது ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களுக்கு ஒரு நல்ல ஆண்டாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
அடுத்து வரப்போகும் ஜேம்ஸ் பாண்ட் படமானது இந்த வரிசையில் 23வது படமாகும். இந்த படத்தை பற்றி பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. அவற்றை எல்லாம் தொகுத்து இங்கு அளித்து இருக்கிறேன்:
இயக்குனர்:
இந்த படத்தை இயக்கப்போவது பிரிட்டனை சேர்ந்த பிரபல இயக்குனர் சாம் மென்டிஸ் (ஆஸ்கர் விருதினை வென்ற இயக்குனர் - நம்ம பாஷையில் சொல்வதானால் நடிகை கேட் வின்ஸ்லெட்டின் புருஷன்). இவர் படங்களை ஒரு மனோதத்துவ கோணத்தில் எடுப்பதற்காகவே புகழ்பெற்றவர். இவரது இயக்கத்தில் படம் வந்தால் அது ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு மறுபடியும் புத்துயிர் கொடுத்தது போலிருக்கும் என்று ரசிகர்கள் பலரும் கருதுகிறார்கள். இந்த தகவல் போலியாக இருக்கும் அல்லது கிசு கிசுவாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு, இதோ அதற்க்கான மறுப்பு காரணிகள்:
கேட் வின்ஸ்லெட் இயக்குனர் சாம் மென்டீசின் மனைவி. இருவரும் இப்போது தனித்தனியே வாழ்ந்து வந்தாலும் இன்னமும் அன்பு குறையாமல் இருப்பவர்கள். தற்போது அமெரிக்காவில் இருக்கும் கேட் வின்ஸ்லெட் இந்த படம் முடியும் வரை தன்னுடைய குழந்தையுடன் இங்கிலாந்து வந்து தங்க சம்மதித்துள்ளார். வழக்கமாக ஜேம்ஸ் பாண்ட் படங்கள் பைன்வுட் ஸ்டுடியோவில் தான் ஷூட்டிங் செய்யப்படும். ஆகையால் அந்த ஷூட்டிங் முடியும் வரை அனைவரும் ஒரு குடும்பமாக தங்கி இருக்கலாம் என்ற முடிவுடன் இந்த செயல்பாடு இருக்கிறது. ஆகையால் சாம் ஜேம்ஸ்பாண்ட் படமெடுப்பது உறுதி. மேலும் விவரங்களுக்கு: Daily Mail.
இந்த லேட்டஸ்ட் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பவர் லண்டனை சேர்ந்த நடிகர் ரஸ்ஸல் பேல். இவர் சமகால நாடக நடிகர்களில் தலை சிறந்தவர் என்று பலராலும் போற்றப்படுபவர். அதனையும் தாண்டி, இயக்குனர் சாம் மென்டீசின் சிறந்த நண்பரும்கூட. இதனால் இவர் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று சுற்று வட்டார தகவல்கள் கூறுகின்றன. இவ்வளவு ஏன், இவரே ஜேம்ஸ் பாண்ட் ஆகவும் நடிக்கலாம் என்றுகூட ஓரிரு தகவல்கள் உலா வருகின்றன. வயதான இவர் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடிப்பதா என்று எனக்கு தோன்றியது. அதுவும் இவரது பல படங்களை இன்டர்நெட்டில் தேர்டிப்பார்த்தபோது, மனதிற்கு சற்றே கடினமாக இருந்தது. இருந்தாலும் நடிப்பே முக்கியம் என்று மனதி தேர்த்ரிக்கொண்டேன். அதுவும், மென்டிஸ் போன்ற ஒரு இயக்குனர் இவரின் எடையை குறைக்க வைத்தாலும் வைக்கலாம், யார் கண்டது?
என்ன இருந்தாலும் நடுவில் பியர்ஸ் பிராஸ்னன் நடித்து மொக்கையாகிவிட்ட ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையை மறுபடியும் சரியான வழிக்கு கொண்டு வந்த டேனியல் கிரேக் இல்லாதது ஒரு குறையாகவே தோன்றுகிறது. நண்பர்களே, உங்களுக்கு என்ன தோன்றுகிறது? டேனியல் கிரேக் மறுபடியும் நடிக்க வேண்டுமா அல்லது வேறொரு நடிகர் நடிக்கலாமா? உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்.
அடுத்த படம்:
ஜேம்ஸ் பாண்ட் நடிக்கும் 23வது படம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கி, 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவரும் என்று ஒரு தகவல். அந்த தகவலை இங்கே படிக்கலாம். மற்ற சுவையான தகவல் என்னவென்றால், இனிமேல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜேம்ஸ் பாண்ட் படம் வெளிவரும் என்று அவர்கள் உறுதி அளித்துள்ளது தான். ஒரு வழியாக அனைத்து தடைகளையும் தாண்டி வருகிறார் நமது சாதனை மன்னன் ஜேம்ஸ் பாண்ட் 007. அவருக்கு வாழ்த்துக்கள்.
அடுத்த பதிவு:
ஜம்போ ஸ்பெஷல் வந்துள்ளது மனதிற்கு ஒரு நிறைவை அளித்துள்ளது. ஆகையால் நண்பர் முத்து விசிறி அவர்கள் சொன்னது போல, காமிக்ஸ் வலை தளங்களிலும் ஒரு மறுமலர்ச்சி கண்டுள்ளது கண்கூடு. நானும் இனிமேல் ரெகுலராக கேம்ஸ் பாண்ட் பற்றி பதிவிடுவேன்.
அடுத்த பதிவு : ஜேம்ஸ் பாண்ட் அவர்களின் இந்திய வருகை.