
நட்புக்கு,
சென்ற பதிவாகிய புராஜெட் எக்ஸ் பற்றி கருத்து தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. அடுத்த பதிவை தயார் செய்துக்கொண்டு இருக்கையில் இன்று காலை ஒரு துக்க செய்தி என்னை எட்டியது. அதாவது, இந்த ஆண்டு ஷூட்டிங் செய்யப்பட்டு 2012 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகவிருந்த ஜேம்ஸ் பாண்டின் 23வது திரைப்படம், போதிய பண வசதி இல்லாமையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகச்சிறந்த உளவாளியின் படத்திற்கா இந்த கதி என்று மனம் நொந்தவாறே இந்த பதிவினை இடுகிறேன்.
1962ஆம் ஆண்டு முதலில் வெளிவந்த டாக்டர் நோ படம் முதல் இது வரை மொத்தம் 22 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் அதிக இடைவெளி விட்டு வந்த படம் என்று பார்த்தால், 16 வது படமாகிய லைசென்ஸ் டு கில் (1989) படத்திற்கும், 17வது படமாகிய கோல்டன் ஐ (1995) படத்திற்கும் நடுவில் இருந்த அந்த ஆறு வருடங்கள் தான். அந்த அளவிற்கு இடைவெளி வர காரணம் என்னவெனில், அடுத்த ஜேம்ஸ் பாண்டாக யாரை நடிக்க வைப்பது என்று செலக்ஷன் நடந்து கொண்டு இருந்தது. அந்த புராசெஸ் உலக அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அனைவரையும் விரும்ப வைக்கும் அளவில் ஒருவரை தேர்ந்தெடுக்க அந்த EON Productions நிறுவனத்தினர் நேரம் எடுத்துக்கொண்டதில் தவறில்லை. ஆனால் இந்த முறை அந்த இடைவேளிதூரம் இன்னமும் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது.
இத்துணைக்கும், கடந்த இரண்டு படங்களில் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்து வரும் டேனியல் கிரேக் படங்கள் உலக அளவில் சிறப்பாகவே வரவேற்ப்பை பெற்றன. குறிப்பாக கேசினோ ராயல் படமானது (பழைய) ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களின் ஆதரவையும் பெற்றது. ஆகையால் புத்துயிர் பெற்றதாக கருதப்பட்ட இந்த பட வரிசை திடீரென்று தடை பட்டதில் உலகெங்கிலும் உள்ள பல ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களுக்கு தாங்கொண்ணா துயரத்தை அளிக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
வசூல் அளவில் இந்த கடைசி இரண்டு படங்கள் அதற்க்கு முந்தைய ரெகார்டுகளை உடைத்து சாதனை புரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பட வசூல் விவரங்கள் கீழ்க்காணுமாறு:
- கேசினோ ராயல் – 2006 – 385 Million Pounds Collection
- குவாண்டம் ஆப் சொலஸ் – 2008 – 392 Million Pounds Collection (Best ever for 007 films)
இந்த 23வது 007 படத்தினை அமெரிக்கன் பியூட்டி என்ற ஆஸ்கார் விருதினை வென்ற இயக்குனர் Sam mendes இயக்கத்தில் MGM நிறுவனத்தின் இணை தயாரிப்பில், 132 Million Pound பட்ஜெட்டில் வெளிவர இருந்த இந்த படம் எப்படி, எந்த சூழலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள, இன்று காலை இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் டெய்லி மிரர் பத்திரிக்கையில் வந்த இந்த செய்தியை ஒரு முறை படித்து விடுங்கள்.
ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்தால் ஒழிய, அடுத்த மூன்று ஆண்டுகளில் மற்றுமொரு ஜேம்ஸ் பாண்ட் படத்தினை காண்பது அரிது என்பது தெளிவாகிவிட்ட இந்த வேளையில், என்னுடைய மனதை தெளிவுபடுத்த மறுபடியும் ஒருமுறை என்னுடைய ஆல் டைம் கிளாசிக் படமாகிய டாக்டர் நோ படத்தினை பார்க்க செல்கிறேன்.
தொங்கும் இதயத்துடன் விடை பெறுவது,
உங்கள் நண்பன்.